GST வரியும் CAG அறிக்கையும்

இரமணன் எல் ஐ சி அதிகாரி

 மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான கயிறு இழுக்கும் போட்டியின் பின் புலத்தில் சி.ஏ.ஜி அறிக்கை கூடுதல் அதிர்ச்சிகளை உருவாக்கியுள்ளதே!


மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையில் நடப்பதை கயிறு இழுப்பு போட்டி என்று சொல்ல முடியாது. போட்டியெனில் இரு பக்கத்திற்கும் சம நிலை இருப்பது போட்டியின் விதிகளில் உறுதி செய்யப்படும். ஆனால் இதுவோ *பாதாளத்திற்குள் தள்ளி விடப்பட்ட மாநிலங்கள் ஏதோ கிடைக்கிற கயிறைப் பிடித்து தத்தளித்து மேலே ஏற முனைகிற நிலை.* மத்திய அரசால் காப்பாற்றுவதற்காக என்று கூறி வீசப்படுகிற கயிறு பலவீனமாய் இருப்பதே கூடுதல் ஆபத்து. இப்போது விசயத்திற்கு வருவோம். நெருக்கடியை மாநிலங்கள் தலையில் கட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் மத்திய அரசின் போக்கை தனியாக நாம் விவாதிக்க வேண்டும். இங்கு அடிப்படை முறைமையிலேயே உள்ள ஓர வஞ்சனை, அசமத்துவத்தை பகிர்ந்து கொள்ளலாம். சி.ஏ.ஜி அறிக்கையும் இந்த உள்ளார்ந்த பிரச்சினைகளை வெளிக் கொணர்ந்துள்ளது. 

2017ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி திட்டம் தொடக்கத்திலிருந்தே  பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகியது. அத்தியாவசிய பண்டங்களுக்கு அதிகபட்ச வரி, படிவங்களை பதிவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள், மாநிலங்களுக்கு இழப்பீட்டை வழங்குவதில் தாமதம் என நாட்டின் பொருளாதாரத்தை இன்னும் மோசமாக்கியது. *எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல* ஜிஎஸ்டி   இழப்பீட்டில் பெரும் தொற்றால் இந்த ஆண்டு ஏற்படும் பற்றாக்குறையான ரூ 2.35 லட்சம் கோடிகளை மாநிலங்கள் கடனாகப் பெற்று சமாளிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் ஆகஸ்ட் மாதம் அறிவுறுத்தினார். அது *கடவுளின் செயல்* என்றும் சொன்னார். *நம்பிக் கழுத்தறுத்தது போல்* ஆன மாநிலங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின. அது அடங்குவதற்குள் இன்னொரு அதிர்ச்சி தகவலும் வெளியானது.

*அது நரிதனைப் பரியாக்கியாக்கிய கதை.* இந்தியத் தலைமைத் தணிக்கையாளரின் (CAG) 2018-19 ஆண்டிற்கான அறிக்கையில் *ஜிஎஸ்டி இழப்பீடு கணக்கிலிருந்து ரூ 47272 கோடியை*
 (2018-19 - ரூ 40806, 2017-18 - ரூ 6406) மத்திய அரசு இந்திய தொகுப்புக் கணக்கில் *(Consolidated fund of india – CFI))* வைத்துக் கொண்டுவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார். இதைப்போல *பல்வேறு செஸ்களில் வசூலிக்கப்பட்ட தொகைகள் அந்தந்த நோக்கங்களுக்காக செலவழிக்கப்படாமல்* சி.எப்.ஐ கணக்கில் வைக்கப்பட்டுள்ளது என்றும் சிஏஜி கூறியுள்ளார். எடுத்துக்காட்டாக  *இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்விக்காக* 2007-2018 ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட செஸ் தொகை ரூ 94036 கோடிகள் மத்திய தொகுப்பு நிதிக்கு போய்விட்டது. இதற்காக ஆகஸ்ட் 2017இல் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு இன்னும் செயலுக்கே வரவில்லை. *2019ஆம் ஆண்டில் மட்டும் இப்படி செஸ் கணக்கில் சேர்க்காமல் விட்ட தொகை 1.1 லட்சம் கோடி என சிஏஜி கூறியுள்ளார்.*  

சிஎப்ஐ கணக்கில் வைப்பதற்கும், செஸ் கணக்கில் வைப்பதற்கும் *வேறுபாடு என்னவென்றால்,* சி.எப்.ஐ கணக்கிலுள்ள பணத்தை மத்திய அரசு தனது விருப்பம் போல செலவழிக்கலாம். செஸ் கணக்கிலுள்ள பணத்தை எதற்காக வசூலிக்கப்பட்டதோ அதற்காக மட்டுமே செலவிட முடியும். மேலும் சி.எப்.ஐ கணக்கில் சேர்த்தால் மத்திய அரசின் பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைத்துக் காட்டலாம். இதை *புள்ளிவிவர ஜாலம்* (Statistical Jugglery) என்பார்கள். *பச்சையாக சொல்ல வேண்டுமென்றால் மோசடி.* செஸ் நிதியை குறிப்பிட்ட நோக்கத்திற்காக விடுவிப்பது அந்தத் துறையின் செலவழிக்கும் திறனைப் பொறுத்தது என்ற மத்திய அரசின் வாதத்தை, தலைமை தணிக்கையாளர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கான சிறப்பு நிதியை ஏற்படுத்துவதும் செயல்படுத்துவதும் நடைபெறவில்லை என்பதே அவரின் குற்றச்சாட்டு. 


இந்தப் பின்னணியில் ஜி.எஸ்.டி குறித்தும் செஸ் குறித்தும் சில விவரங்களைப் பார்க்கலாம்.

*மாநிலங்களின் வரி வருவாய், செலவினத்தில் உள்ள அசமத்துவ கட்டமைப்பு* பற்றி அறிவது அவசியம்.  
இந்திய அரசியல் சட்டம் 265 வது பிரிவின்படி மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள், பாராளுமன்றம் அல்லது மாநில சட்டசபைகள் இயற்றும் சட்டங்களின் கீழ் மட்டுமே விதிக்கப்படவோ வசூலிக்கப்படவோ இயலும். இவ்வரிகள் *நேரடி வரிகள், மறைமுக வரிகள்* என இரு பெரும் பிரிவுகளாக உள்ளன. வருமான வரி, நிறுவன வரி போன்றவை நேரடி வரிகள். *விற்பனை வரியாக இருந்து பின் மதிப்புக் கூட்டு வரியாக மாறி இப்போது சரக்கு மற்றும் சேவை வரியாக உள்ள ஜிஎஸ்டி. சுங்க வரி, கலால் வரி போன்றவை மறைமுக வரிகள்.*
மதிப்புக் கூட்டு வரி, பத்திரப் பதிவு வரி, கேளிக்கை வரி, தொழில் வரி, வாகன வரி, கலால் வரி, மின்சார வரி, சொத்து வரி போன்றவை மாநில அரசுகள் வசூலித்து வந்தவை. இதில் சரக்கு மற்றும் சேவை தொடர்பான வரிகள் அனைத்தும் ஜிஎஸ்டியில் சேர்க்கப்பட்டுவிட்டன. அதாவது மாநிலங்களுக்கு அவற்றை நேரடியாக விதிக்கும் உரிமை இல்லை.
மத்திய மாநில அரசுகளுக்கு இடையே வரி வருவாயில் அசமத்துவமும், சமூகப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் வேறுபாடும் உள்ளன. *முக்கியமானதும் வளரும் தன்மை கொண்டதுமான நிறுவன மற்றும் தனிநபர் வருமான வரி மத்திய அரசிடமே உள்ளது.* மாநில அரசுகளிடம் இத்தகைய செழுமையான ஆதாரம் இல்லாதது மட்டுமல்ல சுகாதாரம் போன்ற உயர்ந்துகொண்டே போகக் கூடிய செலவினங்கள் உள்ளன. அரசியல் சட்டத்தின் விதிகளிலேயே இந்த அசமத்துவம் உள்ளார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ளது. 
*இந்த அசமத்துவத்திற்கு நிவாரணம் உண்டா* மாநில உரிமைகளுக்கான குரலும், போராட்டங்களும் சில முன்னேற்றங்களை ஈட்டித் தந்துள்ளன. அரசியல் சட்டத்தில் விதி 280 உள்ளது. அதன்படி ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஒரு  நிதிக்குழு ஏற்படுத்தி மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு எவ்வளவு வருவாய் ஆதாரங்கள் மாற்ற வேண்டும் என்பதைப் பரிந்துரை செய்ய வேண்டும். எந்தெந்த வரிவருவாய் மாநிலங்களுக்கு பகிரந்தளிக்கப்பட வேண்டும் என்பதை அரசியல் சட்டம் விதி 270 கூறுகிறது. இந்த நிதி ஆதாரங்களே பிரிக்கக்கூடிய தொகுப்பு (divisible poll) எனப்படுகிறது. இதில் துணைவரிகள் (surcharges and cess) தவிர மற்ற வரிகள் அனைத்தும் அடங்கும். 2000க்கு முன் தனிநபர் வருமான வரியும், சுங்க வரியும் தனி விதிகளின் கீழ் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தன. பத்தாவது நிதிக் குழுவின் பரிந்துரையின்பேரில் கீழ்க்கண்ட வரிகள் தவிர மற்ற வரிகள் அனைத்தும் பிரிக்கக்கூடிய தொகுதிக்குள் கொண்டு வரப்பட்டன.

*1.* மத்திய அரசால் விதிக்கப்பட்ட ஆனால் மாநிலங்களால் வசூலிக்கப்பட்டு அதன் வருவாயுடன் சேர்க்கப்பட்ட வரிகள்.

*2.* மத்திய அரசால் விதிக்கப்பட்டு அதாலேயே வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு மாற்றப்பட்ட வரிகள்.

*3.* மாநிலங்களால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்ட வரிகள் மற்றும் துணை வரிகள்.

*4.* குறிப்பிட்ட நோக்கங்களுக்காக விதிக்கபப்டும் செஸ்(cess)
இதற்காக செய்யப்பட திருத்தமே 80ஆவது அரசியல் அமைப்பு சட்ட திருத்தம்

இப்போது ஜிஎஸ்டி குறித்த சில விவரங்களைக் காண்போம்.  

இந்தியா முழுமைக்கும் ஒரே சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது தொடர்பாக *2006-07 பட்ஜெட்* உரையிலேயே குறிப்பிடப்பட்டது. *2009இல் இதற்காக அமைக்கப்பட்ட குழு* விவாத ஆவணத்தை வெளியிட்டது. *2011இல் ஒரு சட்ட திருத்த மசோதா* அறிமுகப்படுத்தப்பட்டு பின் காலாவதியானது. *2014இல் இன்னொரு திருத்த மசோதா* அறிமுகப்படுத்தப்பட்டது. *பின் 2016 ஆகஸ்ட்டில் திருத்த சட்டம்* இயற்றப்பட்டு முதல் ஜிஎஸ்டி கூட்டம் செப்டம்பரில் நடந்தது. *ஏப்ரல் 2017* இல் விரிவான சட்டங்களும் விதிகளும் ஏற்படுத்தப்பட்டு இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட்டன.

*பழுத்த மரங்களில் கல் எறிவது இப்படியே துவங்கியது.* ஜிஎஸ்டி வரியானது சேவைகளும் சரக்குகளும் இறுதியாக எந்த மாநிலத்தில் நுகரப்படுகிறதோ அங்குதான் விதிக்கப்படும். எனவே உற்பத்தி செய்யும் மாநிலங்களான கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் வருவாய் இழப்புக்குள்ளாகும். இதற்காக மத்திய அரசு இழப்பீடு செய்யவேண்டும் என்று வாதிடப்பட்டது. *14 ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி* மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பு முதல் மூன்று வருடங்களுக்கு 100%ம் நான்காவது வருடத்தில் 75%ம் 50%ம் தரப்பட வேண்டும். ஐந்து வருடங்களுக்கும் நூறு சதம் இழப்பீடு கோரிய மாநிலங்கள் ஏமாற்றம் அடைந்தன.

*ஜிஎஸ்டி இழப்பீடு கணக்கிடும் முறை என்ன?* 2015-16ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாக கொண்டு  அந்த வருடத்தில் ஈட்டிய வரி வருவாய் அடுத்த் ஐந்து ஆண்டுகளில் (2017-22) *ஒவ்வொரு ஆண்டும் 14% வளர்ச்சி* எனக் கொண்டு இழப்பீடு கணக்கிடப்படும். மொத்த வருவாயில் பெட்ரோல், மதுபான விற்பனை ஆகிய வரி வருவாய் எடுத்துக்கொள்ளப்படாது. குறிப்பிட்ட சரக்கு மற்றும் சேவைகளுக்கு குறிப்பிட்ட செஸ் விதிக்கப்பட்டு, அந்த வருவாய் *‘ஜிஎஸ்டி இழப்பீடு கணக்கு’* என்பதில் சேமிக்கப்படும். ஒவ்வொரு இரண்டு மாத காலத்திற்கும் தற்காலிக கணக்கீடு செய்யப்பட்டு மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆண்டு முடிந்தவுடன் இறுதிக் கணக்கீடு செய்யப்பட்டு மீதமுள்ள தொகை மாநிலங்களுக்கு வழங்கப்படும். ஐந்து ஆண்டுகள் முடிந்தபின் அந்தக் கணக்கிலுள்ள மீதித் தொகை மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் 50% வீதம் பிரித்துக் கொடுக்கப்படும். 

*செஸ் என்பது புதிய தந்திரம் என்பது அம்பலம் ஆகியுள்ளது.* ஜிஎஸ்டி செயல்படுத்தப்படுவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட ஜிஎஸ்டி செஸ் எனும் துணை வரி விதிக்கப்படுகிறது. செஸ் க்கு ஒரு வரலாறு உள்ளது. 1944 இலிருந்து இதுவரை 42 வகையான செஸ்கள் எனப்படும் துணை வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. *தீப்பெட்டியில் தொடங்கி உப்பு, தேயிலை, இரும்பு சுரங்கத் தொழிலாளர் நல நிதி (1961) சுண்ணாம்புக் கல் சுரங்க தொழிலாளர் நல நிதி (1972), திரைப்படத் தொழிலாளர் நல நிதி  (1981) என்பன இவற்றில் அடங்கும். இதில் பல தொழிலாளர் நல நிதி தொடர்புடையது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.* அவையெல்லாம் முறையாக செலவழிக்கப்படவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுவதையும் இங்கு குறிப்பிட வேண்டும். *ஜிஎஸ்டி செயல்படுத்தப்பட்ட பின் ஏழு வகையான செஸ்கள் மட்டுமே உள்ளன.*

கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் உண்டு. ஜிஎஸ்டி செஸ் தவிர மற்ற செஸ்கள் பிரிக்கப்படும் தொகுப்பில் வராது. அதாவது மாநிலங்களுக்கு கிடைக்காது. *இப்படி மாநிலங்களுக்கு மறுக்கப்படும் வகையிலான வருமானம் மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 2012-13 இல் 6.88% ஆக இருந்து 2018-19இல் 11.88%ஆக உயர்ந்துள்ளது.* 
  
*தொகுத்துப் பார்த்தால்* ஒருபுறம் பிரிக்கக்கூடிய தொகுப்பில் வராத செஸ் போன்ற வரி வருவாயை அதிகரிப்பது; அதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தன் விருப்பம்போல் சலுகைகளை வாரி வழங்க நிதி ஆதாரத்தை தன் கையில் வைத்துக் கொள்வது; இன்னொரு புறம் செஸ் கணக்குகளிலுள்ள தொகையை சி.எப்.ஐ நிதிக்குக் கொண்டு போய் பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைத்துக் காட்டுவது;  ஜி.எஸ்.டி குழுவில் பாஜகவின் எண்ணிக்கையை வைத்து  மாநிலங்களின் உரிமையைப் பறிப்பது; எல்லாவற்றிற்கும் மேலாக பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டபூர்வ ஜிஎஸ்டி இழப்பீட்டையே மறுக்கும் நிலை ஆகியனவற்றை மத்திய அரசு செய்கிறது.

*விவசாய சட்டம், மின்வாரிய சட்டம், சுற்று சூழல் சட்டம், புதிய கல்விக் கொள்கை* என ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது  இந்திய நாட்டின் ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. 

*உசாத்துணைகள்* (REFERENCES)
https://www.indianeconomy.net/splclassroom/what-is-the-divisible-pool/
https://www.thehindu.com/business/Economy/the-hindu-explains-where-are-the-funds-collected-through-cess-parked/article32706
https://www.financialexpress.com/economy/balancing-balance-sheet-cesses-surcharges-help-window-dress-govt-accounts/2092947/
https://en.wikipedia.org/wiki/Taxation_in_India
https://www.fresherslive.com/news/history-of-gst
https://www.bankbazaar.com/tax/tax-levied-collected-by-state.html

*****************
*செவ்வானம்*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முகவான்மை பலன்கள்

CLUB MEMBERSHIP

SMS FOR ENDOWMENT