உயரும் விலைவாசியும் உயராத வருமானமும்
உயரும் விலைவாசியும் உயராத வருமானமும்
கடந்த நான்காண்டுகளில் பணவீக்கத்தை ஒன்றுமில்லாததாகச் செய்து விட்டதாக மோடி அரசு தம்பட்டம் அடித்து வருகிறது.
இதற்கு ஆதரவாக அது அதிகாரபூர்வ மொத்த விலைவாசிக் குறியீட்டைப் பயன்படுத்திக் கொள்கிறது.
இந்த அரசின் பெரும்பாலான சுயதம்பட்டங்களைப் போலவே இதுவும் வெற்று முழக்கமே.
மத்தளத்திற்கு ரெண்டு பக்கமும் அடி என்பது போல் விலைவாசி உயர்வால் எல்.ஐ.சி முகவர்களுக்கு தாங்க முடியாத விலைவாசி உயர்வு ஒருபுறம் குறையும் கமிசன் வருவாய் மறுபுறம் என கடுமையான பாதிப்பினை எதிர்கொள்கின்றனர்.
பாலிசிதாரர்களாகிய உழைக்கும் மக்கள் இந்த விலைவாசி உயர்வால் முதலில் வெட்டுவது எல்.ஐ.சி ரெனிவல் பிரிமியத்தைதான்.
கடும் விலைவாசி உயர்வால் எல்.ஐ.சி முகவர்களுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.
இந்த அரசு பதவியேற்ற மே 2014இலிருந்து, கடைசியாக ஏப்ரல் 2018ல் கிடைத்திருக்கும் மொத்த விலைவாசிப் புள்ளிகளின்படியே சராசரியாக இந்திய கிராமப்புறங்களில் 21% விலைகள் உயர்ந்திருக்கின்றன. நகர்ப்புறங்களில் விலைகள் சராசரியாக 17% உயர்ந்துள்ளன. பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக அரசாங்கம் கூறிக்கொள்வதை ரிசர்வ் வங்கியே சந்தேகத்துடன்தான் பார்க்கிறது.
அதிகாரபூர்வ விலைவாசிப் புள்ளிவிவரங்களை அப்படியே எடுத்துக் கொண்டால் கூட, குறிப்பிட்ட காலத்தில் இருக்கும் சராசரி விலைவாசி மாறுதல்களை மட்டுமே அவை எடுத்துக் கொள்கின்றன. இந்த நான்கு ஆண்டு காலத்தில் அவ்வப்போது குறிப்பிட்ட பொருட்களின் விலைகள் விண்ணை முட்டின என்பதுதான் உண்மையான விவரம். உதாரணமாக 2015 செப்டம்பரிலிருந்து நவம்பர் வரை துவரம் பருப்பின் விலை கிலோ ரூ.200ஐத் தாண்டியதை யாரால் மறக்க முடியும்? 2017 தொடக்கத்தில் சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ.50க் கடந்தது. மோடி பதவியேற்ற முதலாமாண்டில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.100ஐக் கடந்தது. அப்போதிலிருந்து அவ்வப்போது அது ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. 2015 அக்டோபரில் கடுகு எண்ணையின் விலை கிலோவுக்கு ரூ.150ஐ எட்டிக் கடந்தது.
மோடியின் அரசு உண்மையிலேயே சேவை செய்து கொண்டிருக்கும் செல்வந்தர்கள் பிரிவினருக்கு இந்த விலை உயர்வு சிறு எறும்புக் கடி போலத்தான் இருக்கும். ஆனால் தினசரி வாழ்க்கையை ஓட்டவே போராடிக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களுக்கு இந்த விலைவாசி உயர்வு மாதக்கணக்கில் தொடரும்போது, தமது தினசரி உணவைக் குறைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியற்றதாகவே இருக்கும். உண்மையிலேயே இந்தப் பகுதியினர் மீது அரசு கவலை கொண்டிருக்குமானால், அரசு இதில் தலையிட்டு ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் விலைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் மோடி அரசு அதைச் செய்ய விரும்பவில்லை. சந்தைக்கு அனைத்தும் தெரியும் என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கும் அது, அவர்களை சுதந்திரமாக விளையாட விட்டு விட்டது எளியமக்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது.
இது போல் உணவுப் பொருட்களின் விலைவாசி ஏறியதால் விவசாயிகளுக்கு அதிகமான வருமானத்தை அளித்திருக்கவேண்டும், ஆனால் உண்மை என்னவென்றால் ஒருபுறம் உணவுப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டிக் கொண்டிருந்த அதே சமயத்தில், விவசாயிகள் கட்டுப்படியான விலை கிடைக்காததன் காரணமாக, தமது பொருட்களை சாலையில் கொட்டி அழித்துக் கொண்டிருந்த தகவல்களை நாம் தினமும் கேட்டுக் கொண்டு தான் இருந்தோம். இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் விவசாயிகள் உபயோகிக்கும் இடுபொருட்களான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், டீசல், தீவனங்கள் போன்றவற்றின் விலைகள் ஒருபுறம் விலை கடுமையாக ஏறிக் கொண்டிருந்தது. இன்னொரு புறம் அரசாங்கம் அல்லது சந்தையிலிருந்து அவர்களுக்குக் கிடைத்த விலை இடுபொருட்களின் விலையேற்றத்தை
சமாளிப்பதாக இருக்கவில்லை. உதாரணமாக, 2015-16, 2016-17 இரண்டுக்குமிடையிலான ஒரு வருடத்தில் மட்டும் மோட்டார் பம்ப்களுக்கு பயன்படுத்தப்படும் உயர் வேக டீசலின் விலை 23.7% உயர்ந்தது. அதேபோல் கால்நடைத் தீவனத்தின் விலை 11% அளவுக்கு உயர்ந்தது. மோடியின் ஆட்சியில் இந்த விலைகளெல்லாம் உயர்ந்து விவசாயிகளுக்கு ஒட்டுமொத்தத் துன்பத்தைக் கொண்டு வந்தன. இவ்வாறாக, அது உணவை உற்பத்தி செய்யும் விவசாயி அல்லது இறுதியில் உணவுப்பொருளை வாங்கும் விவசாயி உட்பட நுகர்வோர் இருவரும் தாம் உயிர் வாழத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பண்டங்களின் விலைகளும் கடுமையாக ஏறியதால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைவிட அரசாங்கத்தின் கொள்கைகளைப் பெரிதாக குற்றம் கூறிவிட முடியாது.
ஒருபுறம் உணவையும், மற்ற விவசாயப் பொருட்களையும் உற்பத்தி செய்யும் விவசாயிகள் தமது உற்பத்திக்குக் கட்டுப்படியான விலையைப் பெறவில்லை; மறுபுறம் விவசாயிகள் உட்பட பொதுமக்கள் அதே பொருட்களை சந்தையில் அதிக விலை கொடுத்துப் பெற வேண்டியிருந்தது என்பது முரண்பாடு. இவ்வாறு அதிக விலையால் பெறப்பட்ட பணம் எங்கே போனது? அது உண்மையான உற்பத்தியாளர்களான விவசாயிகளிடம் செல்லவில்லை. மாறாக, கார்ப்பரேட்டுகள், பெரும் நிலச்சுவாந்தார்கள் ஆதிக்கம் செலுத்தும் பெரும் வணிகர்கள்-லேவாதேவிக்காரர்களின் கூட்டணியிடம் சென்றது. நாட்டின் மூன்றின் இருபங்கு விவசாயிகள் – விளிம்பு நிலையினர், சிறு, நடுத்தர விவசாயிகளுக்கு வங்கிகளிடமிருந்து நிறுவனக் கடன் மறுக்கப்படுகிறது. அவர்கள் வட்டிக்கடைகாரர்கள், கிராமப்புற பணக்காரர்கள் ஆதிக்கம் செலுத்தும் தனியார் லேவாதேவிக் காரர்களைத் தான் நம்ப வேண்டியுள்ளது. இந்த வர்க்கத்தினர் தான் ஏழை விவசாயிகளிடமிருந்து பொருட்களை மிக மலிவான விலைக்கு வாங்கி சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பவர்கள். அவர்கள் சந்தையையும், பொருட்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்கள் ஈடுபடும் ஊகவாணிபமும் கடுமையான விலையேற்றத்துக்கு ஒரு முக்கியமான காரணம். ‘வர்த்தகத்தை எளிமையாகச் செய்வது’ என்றபெயரில் நடக்கும் ஊகவாணிபத்தை அரசாங்கம் கட்டுப்படுத்த மறுக்கிறது. உயரும் விலைவாசி பொதுமக்களுக்கு அளிக்கும் துன்பத்தைப் பற்றி அதற்குக் கவலையில்லை.
சுகாதார சேவையும், கல்வியும் இல்லாமல் ஒரு நாகரீகமான மனித வாழ்க்கை சாத்தியமில்லை. இந்தப் பகுதிகளில் நாளுக்கு நாள் அரசாங்கம் தனியாரை நுழைப்பதால், அவை அதிக செலவு பிடிப்பதாகவே உள்ளன. இருதய ஸ்டெண்டுகள், செயற்கை மூட்டுகளுக்கான விலையை குறைத்து விட்டதாக அடிக்கடி மோடி பெருமையடித்துக் கொள்வார். ஆனால் அவரது அரசோ ஏழைகளுக்கு மட்டுமல்ல, நடுத்தர மக்களுக்கும் எட்டாதபடி சுகாதார சேவையின் செலவை ஏற்றும் கொள்கைகளை அமல்படுத்தி வருகிறது. பொது சுகாதாரத்துக்கு அதிக ஒதுக்கீட்டைச் செய்யாமல் அவப் பெயர் பெற்ற பொது-தனியார் கூட்டின் மீதான அதன் நம்பிக்கை நிதி ஆயோகின் பரிந்துரையிலிருந்து தெரிகிறது. இதுதான் பல லட்சக்கணக்கானோரின் ஏழ்மைக்கும் பேரழிவுக்கும் காரணமாகும். ஏற்கனவே மருத்துவ செலவுகளுக்கான கடனுக்கு பெரும் காரணம். நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
விலைவாசி விஷயத்தில் அரசாங்கம் செய்த பெரும் துரோகம் சர்வதேச எண்ணை விலை குறைந்தபோது அதற்கேற்ப விலையைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் அளிக்காமல், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, வரிகளை ஏற்றி சாம்பாதிக்கிறது. *இந்த ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி நிலவரப்படி, தில்லியில் டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.68.73, பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ.77.63. இந்தப் பொருட்களுக்கான அதிகபட்ச விலை மே மாத இறுதியில் இருந்தது. அதிலிருந்து அவற்றின் விலை சில பைசாக்கள்தான் குறைந்தன. மற்ற நகரங்களிலும், மாநிலங்களிலும் இதேபோலத்தான் விலைகள் இருந்தன. சில இடங்களில் இன்னும் விலை அதிகமாக இருந்தது. ஏன் இந்த விலைகள் இதுவரை இல்லாத வகையில் உயர்ந்திருந்தன? அரசாங்கம் விலைகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் எண்ணெய் கம்பெனிகள் கடுமையான நட்டத்தை சந்திப்பதாகவும், அதனால்தான் அவை தாமே விலையை நிர்ணயித்துக் கொள்ள அனுமதித்திருப்பதாகவும் அரசாங்கம் கூறுகிறது. இது ஒரு மோசடி.* *கர்னாடகாவில் பாஜக வெற்றி பெறவேண்டுமென்ற போது அதனால் எண்ணெய் நிறுவனங்களை மூன்று வாரங்களுக்கு விலையேற்றாமல் வைத்திருக்க நிர்ப்பந்திக்க முடிந்தது.* ஆனால் மோசடி என்னவென்றால், டீசல் விலையில் புதுதில்லியில் எண்ணெய் நிறுவனங்களுக்குச் செல்லும் பங்கு 48% மட்டுமே. அதேபோல் பெட்ரோல் விலையில் எண்ணெய் நிறுவனங்களுக்குச் செல்வது 59%. மற்ற பகுதியெல்லாம் வரிகள் தான். மத்திய அரசின் விவரங்களிலிருந்தே இதை நாம் தெரிந்து கொள்ள முடியும். 2014-15 இல் பெட்ரோலிய கச்சா எண்ணெய் மற்றும் பொருட்களின் வரிகளில் மத்திய அரசின் பங்கு 1.26 லட்சம் கோடிகள். இது 2016-17இல் அந்தப் பங்கு 2.73 லட்சம் கோடிகளாக அதிகரித்தது. 2016-17ஆம் ஆண்டுக்கான தகவல்கள் தான் கடைசியாக நமக்குக் கிடைத்துள்ளவை. மக்களுக்கு ஆதரவான கேரள அரசு செய்தது போல் மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரியைக் குறைக்க மறுக்கிறது. ஏனென்றால் மத்திய அரசில் தொடர்ந்து வரும் ஆட்சிகளுக்கு அதற்காகத்தான் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தும் முறை கைவிடப்பட்டது. இவ்வாறு ஏறிய சுமையைத் தாங்குபவர்கள் பெட்ரோலையும், டீசலையும் வாங்குபவர்கள் தானே தவிர, ஏழைகளல்ல என்று அரசாங்கம் வாதிடக் கூடும். ஆனால் உண்மை என்னவென்றால், நீங்கள் டீசலை வாங்குகிறீர்களோ இல்லையோ, நீங்கள் வாங்கும் அனைத்துப் பொருட்களுக்கும் அதிகமான போக்குவரத்துச் செலவை நீங்கள் கொடுக்கிறீர்கள்.
*இதனால் ஒவ்வொரு எல்.ஐ.சி முகவரும் பல ஆயிரம் ரூபாயை கூடுலலாக செலவழிக்க வேண்டியுள்ளது.*
*ஏறிவரும் பெட்ரோல் விலையால் மிகப்பெரிய ஆளவில் பாதிக்கப்பட்டது எல்.ஐ.சி முகவர்கள்தான். தங்களுடைய வருமானத்தின் பெரும் பகுதியை பெட்ரோல்க்கே போகிறது. இதற்காக முகவர்களுக்கு பெட்ரோல் அலவென்சு தருவதில்லை*
கச்சா எண்ணெய் விலை சரிந்து 2014க்கு முன் இருந்ததை விட பாதி விலைக்கும் கீழ் வீழ்ச்சியடைந்து விட்டாலும், பாஜக அரசு அதை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க மறுத்து விட்டது. அதற்கு பதிலாக, அது அதனை வரிகளை அதிகரித்து சமன்படுத்தி விட்டது.
எனவே, தினசரித் தேவைகளின் விலைகள் தானாக ஏறுவதில்லை; அவை பொதுமக்களின் நலனை பலிகொடுத்து பெருமுதலாளிகள், பெரும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தினரின் இலாப வேட்கையைத் தணிக்க அரசால் ஏற்றப்படுகின்றன. இதுதான் புதிய தாரளமய முதலாளித்துவ முறை மற்றும் ஆட்சியில் இருக்கும் அதன் சேவகர்களின் உண்மையான முகம்.
விலைகளைக் கட்டுப்படுத்த முடியும்:
உணவுப் பொருட்களில் ஊகவாணிபத்தைத் தடை செய்வதன் மூலமாக.
பொதுவிநியோக முறையை அனைவருக்கும் விரிவுபடுத்தி வாழ்க்கையின் தினசரித் தேவைகளான
14 பொருட்களை அதற்குள் கொண்டு வருவதன் மூலமாக.
பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைத்து, அதன் இடத்தில் உண்மையான விலை, நியாயமான இலாபத்தை வைத்து விட்டு, இறக்குமதி விலை சமன்பாட்டை ஒழிப்பதன் மூலமாக.
கல்வியிலும், சுகாதாரத்திலும் அரசாங்கத்தின் செலவினத்தை அதிகரித்து அரசு நிறுவனங்களின் மூலமாக தேவைப்படும் அனைவருக்கும் இலவசக் கல்வியையும், சுகாதார சேவைகளையும் வழங்குவதன் மூலமாக.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ஒன்றுபட்ட தொழிற்சங்க இயக்கமும் இதே போன்ற கோரிக்கைகளை முன்வைத்தது.
ஆனால் மக்களையும், நாட்டையும் கொள்ளையடிக்கும் புதிய தாரளமய அஜெண்டாவுக்குத் தன்னை மாற்றிக்கொண்ட அரசாங்கங்கள் இதைச் செய்ய விரும்பவில்லை; ஏனென்றால் அவை பெரு வணிகநிறுவனங்கள், கார்ப்பரேட்களின் நலன்களை பாதிக்கும்.
செப்டம்பர் 5 அன்று பாராளுமன்றம் முன்பாக நடைபெறவுள்ள தொழிலாளர்-விவசாயிகள் ஒற்றுமைப் பேரணி மேற்கண்ட கோரிக்கைகளை எழுப்பவுள்ளது.
ஒன்றுபடுவோம்!போராடுவோம்!
0.1 சதவீதத்தினராக உள்ள பெரும் நிறுவனங்களுக்கு சேவை செய்யும் அரசுக்கு கண்டனம் தெரிவிப்போம்.
99.9 சதவீதத்தினருக்கு பயனளிக்கும் கொள்கைகளுக்காகப் அனைத்து உழைக்கும் மக்களோடு இணைந்து முகவர்களாகிய நாமும் போராடுவோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக